மும்பை: 2022-23 நிதியாண்டின் நான்காவது நிதிக் கொள்கை கூட்டம் மும்பையில் நேற்று முன்தினம் (ஆக. 3) தொடங்கியது. ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில் மொத்தம் 6 பேர் அடங்கிய குழு இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இறுதிநாளான இன்று (ஆக. 5) கூட்டத்தின் நிறைவாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, நடப்பாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் கணிக்கப்பட்டதை போன்று, 7.2 விழுக்காடாக ஆகவே நீடிக்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார். நகர்ப்புற தேவை முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், நிலையான பருவமழையால் கிராமப்புற தேவையும் படிப்படியாக மீட்சியடைந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், நாட்டை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல அனைத்து பொருள்களின் விலையையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ரிசர்வ் வங்கி உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வளர்ச்சி விகிதம் 16.2 ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ள நிலையில், அது நான்காவது காலாண்டின் போது 4 விழுக்காடு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போதைய ரஷய் - உக்ரைன் போர் காரணமாக வரும் காலங்களில், பொருளாதாரத்தை பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.8 ஆக கணிக்கப்பட்ட நிலையில், 7.2 ஆக குறையும் என கடந்த ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி மீண்டும் அதிகரிப்பு