வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எப்போதுமே முன்னிலையில் உள்ளது. ஆனாலும் சமீப காலமாக பொருளாதார மந்தநிலையால் பல்வேறு துறைகளும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. வாகன உற்பத்தி, உணவு உற்பத்தி போன்றவை நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது.
மக்கள் எப்போதுமே இலவசம், தள்ளுபடி உள்ளிட்டவற்றில் அதிக நாட்டம் கொள்வர். விலை குறைவான பொருட்களையே மக்கள் அதிகம் வாங்க விரும்புகின்றனர். இந்த நிலையில் போட்டியை சமாளிக்கவும், சந்தையை விரிவு படுத்தி வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் அதன் உற்பத்தி செய்யும் சோப்புகளின் விலையை குறைத்துள்ளது.
உதாரணமாக லக்ஸ், லைஃப்பாய், டவ் போன்ற சோப்புகளை ஹிந்துஸ்தான் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், 4 முதல் 6 விழுக்காடுகள் வரை லக்ஸ் சோப்புகளில் விலையை அந்நிறுவனம் குறைத்துள்ளது. மேலும் சில காம்போ பேக் வகையில் சந்தைக்கு வரும் பொருட்களுக்கு 20 முதல் 30 விழுக்காடுகள் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
பிரபல ஆராய்ச்சி நிறுவனமான கந்தர் வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் மிக அதிகமாக பயன்படுத்தும் சோப்புகளில் லக்ஸ், லைஃப்பாய் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் பெரும்பாலான இந்திய வீடுகளில் லைஃப்பாய் சோப்புகள் தான் அதிகம் படுத்துகின்றனர் என்று தெரிவித்த அந்நிறுவனத்தின் அலுவலர் ஒருவர், ஹிந்துஸ்தான் நிறுவனம் எப்போதும் நியாயமான விலையை தான் நிர்ணயம் செய்யும் என்றும் கூறியுள்ளார். இந்த விலை குறைப்பு முடிவு வாடிக்கையாளர்களை அதிக படுத்தும் பொருட்டு எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.