நஷ்டத்தில் இயங்கும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. அதன் முக்கிய நகர்வாக ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 63.75 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு ஏலமிட மத்திய அரசு முன்வந்துள்ளது.
மத்திய அமைச்சகத்தின் அறிவிப்பு
இது தொடர்பாக மத்திய அரசின் துறையான DIPAM(Department of Investment and Public Asset Management) இந்த நிறுவனத்தை ஏலமெடுக்க விரும்புபவர்கள் வரும் 2021 பிப்ரவரி 13ஆம் தேதிவரை விருப்ப மனுவை அனுப்பலாம் எனக் கூறியுள்ளது.
தற்போதைய நிலையில் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் ஒரு பங்கின் மதிப்பானது ரூ.86.30க்கு விற்பனை ஆகிறது. அதன்படி, சுமார் 64 விழுக்காடு பங்குகளின் மதிப்பு ரூ.2,500 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விற்பனை மூலம் நிறுவனத்தின் நிர்வாக கட்டுபாடும் அரசிடம் இருந்து தனியாரிடம் மாற்றப்படவுள்ளது.
தனியார் மையத்திற்கான முன்னெடுப்புகள்
கடந்தாண்டு நவம்பர் மாதம் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவ குழு ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவை தனியாருக்கு ஒப்படைக்க ஒப்புதல் அளித்திருந்த நிலையில் கோவிட்-19 காரணமாக அது தாமதமானது. நடப்பு நிதியாண்டில் தனியார் மையம் மூலம் சுமார் ரூ.2.1 லட்சம் கோடி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போதை நிலவரப்படி, 12 ஆயிரத்து 380 கோடி ரூபாய் மட்டுமே அரசு திரட்டியுள்ள நிலையில், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் விற்பனை நிலுவையில் உள்ளது.
இதையும் படிங்க: ஒரு கோடியைத் தாண்டிய கோவிட்-19: பொருளாதாரத்தின் நிலை ஒரு பார்வை