சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள ஆறகலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரின் மூத்த மகன் மனோஜ் ஆனந்த்.
இவர் ரஷ்ய நாட்டில் உள்ள வால்கா கிரேடு பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆக.8) மனோஜ் ஆனந்த் கல்லூரி நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள வால்கா ஆற்றுக்கு சென்றுள்ளனர்.
அங்கு ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு அவர்களை அடித்துச் சென்றது. அதில் சிலர் காப்பாற்றப்பட்ட நிலையில் மனோஜ் ஆனந்த் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த நான்கு பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
மனோஜ் ஆனந்த் உயிரிழந்த தகவல்கேட்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதையடுத்து, மனோஜ் ஆனந்தின் உடலைத் தமிழ்நாடு கொண்டுவர, அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள, முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். உயிரிழந்த மாணவரின் உடலைத் தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.