கன்னியாகுமரி மாவட்டம், பழவிளை அருகே காரவிளை அனந்தநாடார் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார். தற்போது கரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்காததால் வீட்டில் இருக்கும் சிறுமி, தங்கள் வீட்டில் வளர்க்கும் மாடுகளை பகல் நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் கட்டி வைத்துவிட்டு மாலையில் அவிழ்த்து வருவது வழக்கம்.
சம்பவத்தன்று காலையில் மாடுகளை தோப்பில் கட்டிவிட்டு மாலையில் அங்கு கட்டப்பட்டிருந்த மாடுகளை அவிழ்க்க மாணவி சென்றுள்ளார். இதனை தோப்பின் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் முருகேசன் (52) என்பவர் பல நாள்களாக நோட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், மாலை நேரத்தில் தனியாக வந்த சிறுமியை முருகேசன் அருகிலுள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக தெரிகிறது. சுதாகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடி வந்த சிறுமி இதுகுறித்து அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தில் முருகேசனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.