திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியில் வசித்து வரும் 65 வயதான மூதாட்டி வெள்ளச்சி என்பவருக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஆலடியான், வெங்கட்ராமன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக பலமுறை சாத்தனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் அவர்களை அழைத்து விசாரணை செய்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதற்கு சேவி சாய்க்காத அவர்கள், தொடர்ந்து மூதாட்டியின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அவர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 10) இரவு மூதாட்டியின் மகன் சிவக்குமார் வீட்டில் இல்லாததை தெரிந்துகொண்ட ஆலடியான், வெங்கட்ராமன் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோரை அழைத்து கொண்டு சிவகுமார் வீட்டிற்கு மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த கும்பல் மூதாட்டியிடம் உனது மகன் சிவக்குமார் எங்கே எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டு அவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த சிவகுமார் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதை தட்டிக் கேட்ட என் தாயார் வெள்ளச்சி மீது கண்மூடித்தனமாக தாக்கிய ஆலடியான், வெங்கட்ராமன் அவருடன் வந்த அடியாட்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தனூர் காவல் நிலையத்தில் சிவகுமார் புகார் அளித்துள்ளார்.