சென்னையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக மதுபானக் கடைகள் இயங்க அரசு அனுமதி வழங்கவில்லை.
ஆனால், சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து சிலர் சட்டவிரோதமாக வாங்கி வந்து சென்னையில் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
இதனை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் பகுதியாக, நேற்று (ஆக.6) பேசின்பாலம் காவல் நிலையத்திற்குட்பட்ட இடங்களில் தனிப்படை காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, புளியந்தோப்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்ததாக புளியந்தோப்பை சேர்ந்த ரூபன்(32), புஷ்பா(60), சுதா(30), மகி(45), சுந்தர்(44), குணா(32), சூர்யா(28), சேட்டு(31), இளையராஜா(44), ஆனந்த்(37), மஞ்சுளா(53), செல்வம்(48), வேல்விழி(54), பக்கிரி(67) என ஆறு பெண்கள் உள்பட 14 பேரை ஒரே நாளில் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்ததாக 1571 மதுபாட்டில்கள், 27.5 கிலோ மாவா போதை பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விற்பனை செய்து வைத்திருந்த 52 லட்சத்து 943 ரூபாய் ரொக்கத்தையும் காவல் துறையினர் கைப்பற்றி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.