ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இளநிலை உதவியாளர் பணியில் சேர ராமநாதபுரம் சூரங்கோட்டையைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 32) என்பவர், நியமன ஆணையை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார்.
ஆனால் நியமன ஆணை குறித்து தலைமை ஆசிரியருக்கு சந்தேகம் எழ, அதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தியிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி அவரது கோப்புகளை ஆய்வு செய்ததில், ராஜேஷ் என்பவருக்கு பணி நியமன ஆணையை அரசு வழங்கவில்லை என்பது தெரியவந்தது. அதைத் தொடந்து, ராமநாதபுரம் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து துணை கண்காணிப்பாளர் திருமலை தலைமையில் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ”2017-18ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில், ராமநாதபுரத்தில் 41 பணியிடங்கள் காலியாக இருந்தன. அதில் 37 நியமன ஆணைகள் பெறப்பட்டு மீதமிருந்த நான்கு நியமன ஆணைகளை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருக்கை கண்காணிப்பாளராகப் பணிபுரியும் கண்ணன் (வயது 47), பரமக்குடி பஞ்சாயத்து உதவியாளராகப் பணிபுரியும் கேசவன் (வயது 45) இருவரும் தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் பணம் பெற்றுக்கொண்டு நியமன ஆணையில் பெயர்களைத் திருத்தி வழங்கினர்” என்பது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து, நியமன ஆணைகள் பெற்ற ராஜேஷ், கலைவாணன் (வயது 26), சதீஷ் குமார் (வயது 33), நியமன ஆணைகளைத் திருத்திக் கொடுத்த கண்ணன், கேசவன் ஆகியோரை குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள மனோஜ் என்பவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையில் திருத்தம் செய்து பணியாணை வழங்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.