நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. தற்போது சில நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் முறையான சிகிச்சை அளித்தும் நோயைக் கட்டுப்படுத்தி, ஊரடங்கில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளித்து வருகின்றன.
சில நாடுகள் இழந்த பொருளாதாரத்தை மீட்கும் நோக்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், எகிப்து அரசு கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்திய ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
அந்நாட்டின் பிரதமர் முஸ்தஃபா மட்பவுலி, 25 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு மீண்டும் தொழிற்சாலைகள் நடத்த அனுமதி அளித்துள்ளார். தேநீர் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்கங்களை திறக்கவும் அனுமதி அளித்துள்ளார்.
நாட்டில் உள்ள பள்ளி வாசல்கள், தேவாலயங்களைத் திறக்கவும் அனுமதி அளித்துள்ளார். இருப்பினும், பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமை கூட்டுத் தொழுகைக்கும், தேவாலயங்களில் ஞாயிற்றுக் கிழமை சிறப்புப் பிராத்தனைகளுக்கும் தடை விதித்துள்ளார்.
இதனை பல்வேறு தொழிலதிபர்கள் வரவேற்றாலும், நாட்டில் மீண்டும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முன்னதாக கடந்த மாதம் எகிப்து சுகாதார அமைப்பு இன்னும் சில நாள்களில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தின் உச்சத்திற்கு செல்லும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச நிதியம் கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சீரமைப்பதற்காக 5.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : மனித தொடர்பில்லாமல் டெலிவரி செய்யும் ரோபோட்ஸ்!