வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்" மற்றும் "மாற்றம் பவுண்டேஷன்" மூலம் இணைந்து சினிமாத் துறை சார்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு கரோன நிவாரண பொருள்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சி இன்று சென்னை முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு நடிகர் சூரி, நிவாரண பொருள்களை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள்.
எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம். அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது. கடந்த 3 மாதங்களில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கரோனாதான்.

தேவையின்றி வெளியே வராதீர்கள், உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என நமக்கு அடிக்கடி உணர்த்தியவர்கள் ஊடக நண்பர்கள்தான். அவர்களுக்கு குடும்பம் இருந்தும் பொது மக்களுக்காக அவர்கள் ஆற்றும் பணிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
மாற்றம் பவுண்டேனிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். உங்கள் அனைவருக்கும் உதவ நான் அன்போடு கேட்டுக்கொண்டேன். சிறிதும் யோசிக்காமல் அவர்களும் உடனே சம்மதம் தெரிவித்தது மட்டுமன்றி, உங்கள் தலைமையிலேயே இந்த உதவி திட்டங்கள் நடைபெறட்டும் என்று கூறினார்கள்.
நமது உயிரை காக்க நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை கடைப்பிடிப்போம். பயப்படாமல் இருங்கள், அதே நேரத்தில் மெத்தனமாக இருக்காதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள். மீண்டும் நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு வர அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்றார்.