பெண்கள், குழந்தைகள் குறித்து ஆபாசமாகப் பேசி பப்ஜி விளையாட்டை தனது யூ-ட்யூபில் வெளியிட்டுவந்தவர் மதன். இதனால் பப்ஜி மதனை கைதுசெய்யக்கோரி மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு இரண்டு புகார்கள் வந்தன.
புகாரின் அடிப்படையில் பப்ஜி மதன் மீது ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மதனை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இந்நிலையில் முன்பிணை கோரி மதன் என்கிற மதன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அந்த மனு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது,நீதிபதியிடம் மதன் பேசிய ஆடியோ சமர்ப்பிக்கப்பட்டது. அதனைக் கேட்கத் தொடங்கிய நீதிபதி சில நிமிடங்களிலேயே, மதனின் பேச்சைக் காதுகொடுத்து கேட்க முடியாத அளவிற்கு இருப்பதாகத் தெரிவித்தார்.
யூ-ட்யூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என மதன் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, வழக்கிற்காக சில பகுதிகளைக் கேட்டதாகப் பதிலளித்தார்.
அந்தப் பதிவுகளைக் கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்தார். அதேசமயம் மதனின் யூ-ட்யூப் பதிவுகளை ஒன்றாகச் சேர்த்து, சிடி-யாகவோ, பென் டிரைவாகவோ தாக்கல்செய்ய காவல் துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 18), இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில், மதனின் பேச்சுகள் அடங்கிய சிடி தாக்கல்செய்யப்பட்டது.
மதன் கைதுசெய்யப்பட்டதால், முன்பிணை மனு மேற்கொண்டு விசாரிக்கத் தேவையில்லை என மதன் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். இருதரப்பு விளக்கத்தை ஏற்று மனுவைத் தள்ளுபடிசெய்து நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.