ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில் உள்ள பட்ராடு அனல் மின் நிலையத்தில் நரேஷ் மஹ்தோ என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சஞ்சலா குமாரி (25) என்ற மகளும் ரோஹித் குமார் (21) என்ற மகனும் உள்ளனர். இதில் சஞ்சலா குமாரி, சோனு அன்சாரி என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதனை அறிந்த ரோஹித் குமார், தனது சகோதரி வேறு சமூகத்தைச்சார்ந்த ஒருவரை காதலித்து வருவதாகக்கூறி எதிர்ப்புத்தெரிவித்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த சஞ்சலா மற்றும் அவரது காதலர் சோனு ஆகிய இருவரும் இணைந்து ரோஹித் குமாரை கொலை செய்துள்ளனர்.
மேலும் ரோஹித்தின் உடலை அனல் மின் நிலைய குடியிருப்பின் பின்பகுதியில் புதைத்துள்ளனர். இந்நிலையில் தனது மகனை காணவில்லை என இவர்களது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சஞ்சலா குமாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது தனது காதலனுடன் இணைந்து ரோஹித் குமாரை கொலை செய்ததை சஞ்சலா குமாரி ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து ரோஹித்தின் உடல் நேற்று (செப்டம்பர் 11) மாஜிஸ்திரேட் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து தனது தம்பியை கொலை செய்த சஞ்சலா குமாரி மற்றும் அவரது காதலர் சோனு அன்சாரி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: திருமண மோசடி செய்த கணவன்.. துணை போன மனைவி...