ஹிமாச்சல பிரதேசம்: ஹிமாச்சல பிரதேசத்தின் உனா நகரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர், இவர்களது வீட்டுக்கு வந்துள்ளார்.
இது குறித்து இளைஞரின் சகோதரர் கேட்டபோது, இரண்டு இளைஞர்களும் சேர்ந்து வாழப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சகோதரர், தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரித்த உறவினர்கள், இளைஞருக்கு பெண்ணுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறி, பிரச்சினை செய்துள்ளனர். இதனால், இரண்டு இளைஞர்களும் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இருவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் நட்பாகி பின்னர் காதலித்ததாகவும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
தற்போது சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதையடுத்து, இரண்டு இளைஞர்களின் குடும்பத்தினரையும் போலீசார் அழைத்துள்ளனர்.
குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே முடிவு எடுக்க முடியும் எனப் போலீசார் தெரிவித்தனர். உனா நகரில் இரண்டு இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வது (Gay marriage)இதுவே முதல்முறை என்பதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: முடிவில்லாமல் செல்லும் லாக் அப் மரணங்கள் முடிவுக்கு வருமா?