புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமியை அடுத்து புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தலைவராக மணவேலி தொகுதியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஏம்பலம் செல்வம் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து அவரது சட்டப்பேரவை அலுவலகத்தில் ஆன்மீகவாதிகள் குழுவினர், சிறப்புப் பூஜை செய்து, சபாநாயகர் செல்வத்திற்கு ஆசி வழங்கினர்.
இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகம் சீரமைக்கப்பட்டு வருகின்றது. அங்குள்ள இருக்கைகள், கட்டடங்கள், மர சாமான்கள் போன்றவை மிகவும் சேதமடைந்துள்ள காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், வாஸ்து அல்லது சென்டிமென்ட் சிக்கல் காரணமாக புதுப்பிக்கும் பணிகள் நடக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பணிகள் முடிய இன்னும் 10 நாள்கள் ஆகும் என்பதால் அதுவரை சபாநாயகர் அலுவலகம், புதுச்சேரி மாநில சட்டப்பேரவை வளாகத்தின் 4ஆவது மாடியில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.