புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் 20 வகையான தின்பண்டங்களை கொண்டு கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம், ஸ்டார் ஆகியவற்றை உருவாக்கியுள்ளர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறித்துவர்கள் ஆண்டுதோறும் தங்களது இல்லங்களில் குடில் அமைத்து கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியரான சுந்தரராசு என்பவர் தனது வீட்டில் வித்தியாசமான முறையில் கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குடில் அமைத்துள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சுந்தரராசு ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் குடில் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக காய்கறிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், புத்தகங்கள், தேங்காய் மற்றும் தென்னைப் பொருட்கள் ஆகியவனற்றைக் கொண்டு குடில்கள் அமைத்துள்ளார்.
தற்போது இவர் அமைத்துள்ள குடிலில் முறுக்கு, அப்பளம், மிச்சர், வத்தல் உள்ளிட்ட தின்பண்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் குடிலில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொம்மைகளுக்கு மாஸ்க் ஆகியவற்றை அணிவித்துள்ளார். இந்த குடில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் கண்காட்சி!