லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், இப்போது இருந்தே தேர்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டது.
ஆளும் கட்சியான பாஜக தேர்தல் பணிகளை முடக்கிவிட்டுள்ள நிலையில், மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகியவை தங்கள் பங்கிற்கு பரப்புரையை ஆரம்பித்துவிட்டன.
'வேறு வேலையே இல்லையா'
இந்நிலையில், பிரியங்கா காந்தி பெண்கள் முன்னேற்றத்திற்கான பேரணி நேற்று (டிசம்பர் 21) டெல்லியை வந்தடைந்தது. அதன்பின் அவர் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதாக முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "எனது பிள்ளைகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கியுள்ளனர். அரசுக்கு வேறு வேலை ஏதும் இல்லையா?" எனக் கடுமையாகச் சாடினார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுகிழமை (டிசம்பர் 19) அன்று அகிலேஷ் யாதவ், தனது தொலைபேசி உரையாடல் அனைத்தும் ஒட்டுக்கேட்கப்படுகிறது என்றும், இதுபோன்ற சிலருடைய உரையாடல்களின் ஒலிப்பதிவை ஒவ்வொரு நாள் மாலையிலும் முதலமைச்சர் யோகி கேட்பதாகவும் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகளிர் சுய உதவிக்குழுக்களின் வங்கி கணக்கில் ரூ.1000 கோடி; பிரதமர் மோடி