புதிய கல்விக் கொள்கையின்படி, வரும் கல்வியாண்டில் இருந்து பிராந்திய மொழிகளில் பொறியியல் கல்வி பயிற்றுவிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) முன்னதாக அனுமதி அளித்தது. இந்நிலையில், பொறியியல் இளங்கலை பட்டப்படிப்பில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க எட்டு மாநிலங்களில் உள்ள 14 பொறியியல் கல்லூரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அனுமதியைப் பெற்றுள்ளன.
அதன்படி, உத்தரப் பிரதேசத்திலிருந்து நான்கு கல்லூரிகள், ராஜஸ்தானில் இருந்து இரண்டு கல்லூரிகள், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து தலா ஒரு கல்லூரியும் இந்தி மொழியில் கற்பிக்க உள்ளன. ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் முறையே தெலுங்கு, மராத்தி, பெங்காலி, தமிழ் ஆகிய மொழிகளில் கற்பிக்க உள்ளன.
தொழில்நுட்பக் கல்வி கட்டுப்பாட்டளர்களின் ஒப்புதலின்படி, கணினி அறிவியல், எலட்ரானிக், சிவில், மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஐடி ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகள் பிராந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்பட உள்ளன.
தாய்மொழிக் கல்வி படிப்பை புதிய கல்விக் கொள்கை ஊக்கப்படுத்தும் நிலையில், இந்த ஆண்டு தொடங்கி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மலையாளம், பெங்காலி, அசாமி, பஞ்சாபி, ஒரியா, இந்தி உள்ளிட்ட 11 பிராந்திய மொழிகளில் பி டெக் படிப்புகளை படிக்க அனுமதித்துள்ளது.
வரும் கல்வியாண்டில் தொடங்கி பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்விகள், குறிப்பாக பொறியியல் கல்வி பயிற்றுவிக்கப்படும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனி தாய்மொழியில் பொறியியல் படிக்கலாம்!