பாங்கா: பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நேற்றிரவு(பிப்.26) திருமண ஊர்வலம் சென்றது. அப்போது, இரண்டு வயது சிறுமி ஒருவர் தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டு ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் சிறுமி மாயமாகிவிட்டார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அரை மணி நேரம் கழித்து, நபர் ஒருவர் சிறுமியை அவரது வீட்டருகே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். சிறுமியின் நிலையைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ரத்தம் தோய்ந்த ஆடையுடன் சுயநினைவின்றி சிறுமி காணப்பட்டார்.
அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநரான பிரதீப் யாதவ்(40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு பாங்காவில் ஹோலிப் பண்டிகையின்போது ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனைவியை கொன்று பேரலில் எடுத்துச் சென்ற நபர்.. கர்நாடகாவில் நடந்தது என்ன?