உடுப்பி:கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 6 பேரை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்தனர். இதில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர் ஒருவரின் மகனும் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து உடுப்பி பாஜக எம்எல்ஏ ரகுபதி பட் அந்த காங்கிரஸ் தலைவர் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அக்காங்கிரஸ் தலைவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் கைதானவர்களிடம் என்ஐஏ நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ரீஷன் என்பவர் உடுப்பி மாவட்டத்தின் பிரம்மாவர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகி தாஜுதீனின் மகன் என்பது தெரியவந்தது. கர்நாடகாவில் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொள்பவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையின் கீழ் ரீஷன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பாஜக எம்எல்ஏ ரகுபதி பட் இந்த குற்றத்திற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பேற்க வேண்டும் எனவும், தாஜுதீன் ஒரு சாதாரண தொழிலாளி அல்ல எனவே அவர் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தேனீக்கள் தாக்கியதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 குதிரைகள் உயிரிழப்பு