டெல்லி: ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் 'ஜேன்சென்' கரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அஸ்ட்ரா ஸெனக்கா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம், அனுமதி பெற்று 'கோவிஷீல்ட்' எனும் பெயரில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்தியாவில் பயனர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் இரு தவணைகளாக செலுத்தப்பட வேண்டும். முதல் தவணை முடிந்து ஒன்று அல்லது 2 மாதங்கள் கழித்து 2ஆவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், 'ஜேன்சென்' தடுப்பூசி ஒரு முறை மட்டும் செலுத்தினால் போதும். அமெரிக்காவில் ஏப்ரல் 23ஆம் தேதி, இத்தடுப்பூசிக்கு, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதியளித்தது. இந்த மருந்தின் பக்க விளைவாக, மிகவும் அரிதான மற்றும் தீவிரமான ரத்த உறைவு இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் நியூயார்க் தயாரிப்பு ஆலையில், மருந்து கலப்பில் ஏற்பட்ட குளறுபடியால், 1.5 கோடி 'ஜேன்சென்' தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யாரெல்லாம் 'ஜேன்சென்' தடுப்பூசியை எடுத்துக் கொள்ளக்கூடாது?
- தீவிர ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் இந்த மருந்தினை செலுத்திக் கொள்ள கூடாது.
- தடுப்பூசிகளுக்கு உடனடியாக எதிர்வினையாற்றும் உடற்கூறு கொண்டவர்கள் இதனை எடுத்துக்கொள்ளக் கூடாது.
என்னென்ன பக்கவிளைவுகள் இருக்கும்?
- கையில் வலி, சிவந்து போதல் அல்லது வீக்கம். உடலில் சோர்வு, தலைவலி, தசை வலி, குளிர் காய்ச்சல் மற்றும் குமட்டல்
- இந்த பக்க விளைவுகள் பொதுவாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஓரிரு நாட்களில் தெரிய வரும்
- பக்க விளைவுகள் அன்றாட நடவடிக்கைகளைச் செய்வதற்கான உங்கள் திறனைப் பாதிக்கலாம். ஆனால், அவை சில நாட்களில் விலகிச் செல்லும். அப்படி இல்லையென்றால் உடனடியாக மருத்து வரை தொடர்புகொண்டு ஆலோசனை பெற வேண்டும்.
தடுப்பூசிக்கு சோதனையின் போது மயக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதா?
- விரைவான சுவாசம், குறைந்த ரத்த அழுத்தம், உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு போன்ற பதட்டத்துடன் தொடர்புடைய மயக்கம் (சின்கோப்) மற்றும் பிற நிகழ்வுகள் ஏதேனும் தடுப்பூசி செலுத்திய பிறகு நிகழலாம். அசாதாரணமானது என்றாலும், இந்த நிகழ்வுகள் எதிர்பாராதவை அல்ல, அவை பொதுவாக தீவிரமானவை அல்ல.
- தடுப்பூசி பாதகமான நிகழ்வுகள் குறித்து அறிக்கையிடும் அமைப்பின் (VAERS) தகவல்களின் படி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2021-இல் அமெரிக்காவில் 80 லட்சம் பேருக்கு ஜே & ஜே / ஜேன்சென் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்து பார்த்ததில் 653 மயக்க நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் செயல்திறன்
- சோதனை முடிவுகளில் 'ஜேன்சென்' தடுப்பூசி மொத்தமாக 66.3 விழுக்காடு அளவு செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.
- இதனை செலுத்திக் கொண்ட நபர்கள் யாருக்கும் 4 வாரங்களுக்கு பிறகு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.