நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டமான, 'ஜல் ஜீவன்' எனும் திட்டத்தை பிரதமர் மோடி முன்னதாக அறிமுகம் செய்து வைத்தார். வரும் 2024ஆம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி முடிப்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதனையொட்டி ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த 2019ஆம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களுக்கும், ஒரு குறிப்பிட்ட தொகையை மத்திய ஜல் சக்தி துறை ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்திற்கு தற்போது 5,601.16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஜல் சக்தி அமைச்சகம் கூறுகையில், ”2019ஆம் ஆண்டு, அசாமில் ’ஜல் ஜீவன் மிஷன்’ தொடங்கப்பட்ட போது 25 ஆயிரத்து 335 கிராமங்களில் மொத்தம் 63 லட்சத்து 35 ஆயிரம் வீடுகளில், 1.11 லட்சம் (1.76 விழுக்காடு) குடும்பங்களுக்கு மட்டுமே குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 22 மாதங்களில், மாநிலத்தில் ஆறு லட்சத்து 88 ஆயிரம் குடும்பங்களுக்கு (10.87 விழுக்காடு) குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் ஏழு லட்சத்து 99 ஆயிரம் குடும்பங்களுக்கு (12.63 சதவீதம்) குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீரை குழாய் மூலம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இந்த ஆண்டு ஜல் ஜீவன் மிஷனின் கீழ் அசாமுக்கு 5,601.16 கோடி ரூபாய்யை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது கடந்த 2020-21ஆம் ஆண்டு காலக்கட்டத்தைவிட நான்கு மடங்கு அதிகமாகப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் மீதமுள்ள 55.35 லட்சம் வீடுகளுக்குக் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் வகையில், 2021-22ஆம் ஆண்டில் 22.63 லட்சம் வீடுகளுக்கும், 2022-23ஆம் ஆண்டில் 20.84 லட்சம் வீடுகளுக்கும், 2023-24ஆம் ஆண்டில் 13.20 லட்சம் குழாய்கள் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்த இணைப்புகளை வழங்குவதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.