கடந்த ஜூலை மாதம், ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமத் முஸ்தக் அஹமத் தனது பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, மணிப்பூரைச் சேர்ந்த ஞானேந்திரா நிங்கோம்பம் ஹாக்கி இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், போட்டியின்றி தற்போது அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலத்தில் இருந்து தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் நபர் இவர் ஆவார். முகமத் முஸ்தக் அஹமத் மூத்த துணைத்தலைவர் பதவிக்கு போட்டியின்றி முன்னதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆட்சிமன்றக் குழுவிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.
இது குறித்து ஹாக்கி இந்தியா அமைப்பின் செயலர் ராஜேந்தர் சிங் கூறுகையில், "ஹாக்கி நிர்வாகத்தில் இருவரும் நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ளனர். அவர்களின் அனுபவம் அமைப்புக்கு பெரிய பயனாக அமையும். நாட்டில் விளையாட்டை மேம்படுத்த அவர்களின் ஆலோசனை பேருதவியாக அமையும். நமது லட்சியங்களை நிறைவேற்ற அவர்களின் தலைமைப் பண்பு பெரிய பங்காற்றும்" என்றார்.