திருவனந்தபுரம் : இந்தச் சமூகத்தில் ஒரு பெண், எட்டு மாத கைக்குழந்தையுடன் தனியாக வாழ்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்தவர்தான் ஆனி சிவா.
இன்று வர்காலா காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் இவர் கடந்துவந்த பாதை அவ்வளவு எளிதல்ல. அவர் நம்மிடம் தனது வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார்.
காதல் வாழ்க்கை
அப்போது, “காதலிப்பது குற்றமல்ல, யாரை காதலிக்கிறோம் என்பதில் கவனம் வேண்டும். படிக்கும் போதே ஒருவர் மீது காதல் வயப்பட்டேன். திருமணமும் செய்துகொண்டேன். எங்களுக்கு மகன் பிறந்தான்.
அவன் எட்டு மாத கைக் குழந்தையாக இருக்கும்போது என் கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனக்கு பிழைக்க வேறு வழி தெரியவில்லை. வர்காலா கடற்கரையில் எலுமிச்சை பானம் விற்று பிழைப்பு நடத்தினேன்.
காவல் பணிக்கு விண்ணப்பம்
சேவானா என்ற நிறுவனத்தின் குழம்பு பவுடரை வீடு வீடாக சென்று விற்பனை செய்தேன். இதன் மூலம் கிடைத்த பணத்தில் என் படிப்புக்கு தேவையான எழுதுப் பொருள்கள் மற்றும் புத்தகங்கள் வாங்கினேன்.
எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் கடுமையான ஆர்வம் உண்டு. இந்நிலையில் 2014ஆம் ஆண்டு காவல் பணிக்கு விண்ணப்பித்தேன்.
காவல் உதவி ஆய்வாளர்
தொடர்ந்து 20 நாள்கள் கடினமாக படித்தேன். இந்நிலையில் எனக்கு காவல் பணி கிடைத்தது. தொடர்ந்து 2016ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினேன்.
அதிலும் நான் தேர்ச்சி பெற்றேன். இதையடுத்து ஜூன் 25ஆம் தேதி வர்காலா காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்துள்ளேன்” என்றார்.
முன்னுதாரணம்
ஆனி சிவாவின் வாழ்க்கை அவ்வளவு எளிதாக கடந்துவிடவில்லை. அவர் பல துன்பங்களை அனுபவித்துள்ளார். ஏன் தற்கொலை எண்ணம் கூட அவருக்கு உதித்துள்ளது. இதற்கிடையில் கடுமையான போராடி உழைத்து முன்னேறியுள்ளார்.
அந்த வகையில் ஆனி சிவாவின் வாழ்க்கை சாதிக்க துடிக்கும் அத்தனை பேருக்கும் நல்லதொரு பாடம்!
இதையும் படிங்க : தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்