மும்பை: சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி வழக்கில், மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அனில் தேஷ்முக்கிற்கு, அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரித்து வருகிறது. உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் ஊர்க்காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பரம் வீர் சிங், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் “மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்’’ என தெரிவித்து இருந்தார்.
இவ்விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அனில் தேஷ்முக் விலகினார்.
இதைத்தொடர்ந்து அனில் தேஷ்முக்(வயது 72) மீது பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணைதொடர்பாக மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில், ஏற்கனவே அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கின் தனி செயலர் சஞ்சீவ் பாலாண்டே மற்றும் தனி உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில் பண மோசடி வழக்கில் அனில் தேஷ்முக்கை நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது.
அதில், மும்பையில் உள்ள மத்திய நிறுவன அலுவலகத்தில் ஜூலை 5(திங்கள்கிழமை) ஆம் தேதி ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை அனில் தேஷ்முக் தெரிவிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக, ஏற்கனவே இரண்டு முறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு, அனில் தேஷ்முக் நேரில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு!