புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட அரசு சார்பில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் நான்கு இடங்களில் பாடல், நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. தேசிய அளவில் புகழ்பெற்ற 45 நடனக் குழுவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கமர் ஃபிலிம் பேக்டரி சார்பில் பழைய துறைமுகத்தில் சன்னி லியோனின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (டிசம்பர் 30), நாளை (டிசம்பர் 31), நாளை மறுநாள் (2022 ஜனவரி 1) ஆகிய மூன்று நாள்கள் சன்னி லியோனின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்குத் தமிழர் தளம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
கண்டன கோஷங்கள்
இந்த நிலையில் தமிழர் களம் அமைப்பின் தலைவர் அழகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடற்கரைச் சாலையில் ஒன்று திரண்டு கலை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை இழுத்து மூடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுப்புக்கட்டை போட்டுத் தடுத்தனர். ஆனால் தடுப்புக் கட்டையைத் தூக்கி எறிந்து கலை நிகழ்ச்சி நடைபெறும் கூட்ட அரங்கை நோக்கி போராட்டக்காரர்கள் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து காவல் துறையினர் அவர்களைத் தடுக்கும்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்ட அரங்கிற்குள் சென்ற அவர்கள் கதவைத் திறந்துசென்று நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
சீரழியும் கலாசாரம்
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அத்துமீறி போராட்டம் நடத்தியதாகக் கூறி போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இது குறித்து அழகர் கூறும்போது, புதுச்சேரியின் கலாசாரத்தைச் சீரழிக்கும் முதலமைச்சர், துணைநிலை ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டம் தொடரும் என்றார்.
இதையும் படிங்க: 'புத்தாண்டு 2022; நள்ளிரவு 12 மணிக்கு கோயில்கள் திறக்கப்படும்'