இயேசு கிறிஸ்து பிறந்தநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. புதுச்சேரி உள்ள அனைத்து ஆலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள ஜென்மராக்கினி பேராலயத்தில் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்த ராயர் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் ஆலயத்தில் சிறப்பு குடிலில் இயேசுவின் பிறப்பு குறித்த சிறப்பு சொரூபங்கள் வைக்கப்பட்டிருந்தன. அரசின் கரோனா வழிகாட்டுதல் விதிமுறைகளுடன் தகுந்த இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு திருப்பலி நடைபெற்றது. ஆலயத்தில் நுழைவதற்கு முன், பக்தர்களுக்கு சனிடைசர் வழங்கப்பட்டது, உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது.
முதலமைச்சர் நாராயணசாமி ஜென்மராக்கினி பேராலயத்தில் சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கத்துக்கு மாறாக தேவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.