புதுச்சேரியில் சுதேசி பாரதி, ஏஎப்டி நூற்பாலைகள் இயங்கிவந்தன. இவற்றில் ஏறக்குறைய 15,000 ஊழியர்கள் பணி புரிந்துவந்தனர். காலப்போக்கில் இந்த மில்கள் நிறைவடைந்ததால் நிர்வாகம் ஆட்குறைப்பு செய்தது. மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு லே ஆப் முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது 1,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், நிரந்தர தொழிலாளர்கள் பிரச்னைக்கு ஒரு நல்ல முடிவை ஏற்படுத்திவிட்டு புதிய திட்டங்களுடன் இந்த மில்களை அரசு புனரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மில் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சுதேசி பாரதி, ஏஎப்டி மில் தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.