கரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் நாடு முழுவதும் வருகிற 16ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதற்காக, புனேவிலுள்ள சீரம் நிறுவனத்தின் ஆய்வகத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். அவ்வாறு மத்திய அரசு இலவசமாக வழங்காவிட்டால், தேவைப்படும்பட்சத்தில் டெல்லி மக்களுக்கு இலவசமாக டெல்லி அரசே வழங்கும். கரோனா தடுப்பூசி குறித்து முழுமையாகத் தெரியாமல் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
கரோனா தடுப்பூசிகள் முதல்கட்டமாக சுகாதார துறையினருக்கும், களப்பணியாளர்களுக்கும் வழங்கப்படும். கடந்த ஒரு வருடமாக அவர்கள் அனுபவித்த வேதனைக்கு இது மருந்தாக அமையும்” என்றார். டெல்லியில் வரும் சனிக்கிழமை முதல், 89 நிலையங்களில் கரோனா தடுப்பூசிகள் விநியோகம் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.