உளவுத்துறை அலுவலர் அங்கித் சர்மா பிப்ரவரி 25ஆம் தேதி டெல்லியில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு தாக்கல் செய்துள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனது வீட்டிலிருந்து கும்பலை வழிநடத்தியதாகவும் அந்த கும்பல் பிப்ரவரி 25ஆம் தேதி அங்கித்தை கொலை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கித் சர்மாவின் கொலை நன்கு திட்டமிடப்படு நிகழ்த்தப்பட்டிருப்பதாக கூறும் அந்த குற்றப்பத்திரிகையில், அங்கித் சர்மா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோ காட்சி இந்த வழக்கில் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகவும், அந்த வீடியோ காட்சியில், ஒரு கும்பல் அங்கித்தின் உடலை கழிவுநீர் கால்வாயில் வீசுவது பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், “தனது சகோதரனின் கொலையில் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்” என அங்கித் சர்மாவின் மூத்த சகோதரர் அங்கூர் சர்மா கூறியுள்ளார்.