தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்திவருகின்றனர். மேலும் நாடு முழுவதும் கொண்டாட்டத்துக்கு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா சார்பில் பேரணி, பாத யாத்திரைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதத்திலிருந்தே கொண்டாட்டத்துக்கு காங்கிரஸ் தயாராகிவிட்டது. அதேபோல் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.
காந்தியின் கொள்கையான சுயராஜ்யம் எனப்படும் சுயாட்சி, எளிமை, வன்முறையில்லா சமுதாயம் ஆகியவை குறித்து பரப்புரை மேற்கொள்ள பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. மேலும் காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மாபெரும் கொண்டாட்டத்துக்கும் அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதா கட்சி செயல் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாரதிய ஜனதா கட்சியின் முதுபெரும் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
#MahatmaGandhi