தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடுத்த பனாமா பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்புவதற்காக மே மாதம் 8ஆம் தேதி வங்கி ஊழியர்கள் காரில் பணத்துடன் வந்தனர். அப்போது ஊழியர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு,ஏடிஎம் மையத்திற்கு செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நான்குபேர் காரில் இருந்த ரூ.75 லட்சத்தை திருடிச்சென்றனர்.
இதையடுத்து காரில் இருந்த பணத்தை எடுக்க ஊழியர்கள் வந்தபோது, அங்கு பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து பனாமா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி, அதில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கைதான நான்குபேரில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவர்தான் கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் ரொக்கம், ஒரு வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கைதான நான்குபேர் ரஜினிநகர் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.