புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் வவுச்சர் ஊழியர்கள் தங்களை தினக்கூலி ஊழியராக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சம்பளத்தை உயர்த்தி 30 நாட்களும் வேலை வழங்க வேண்டும், அரசின் கருவூலம் மூலமாக ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்கள் நடத்திவந்தனர்.
போராட்டத்தின் போது இவர்களது கோரிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்திருந்தார். இதனால் இவர்களும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். ஆனால் பல நாட்கள் கடந்தும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (செப்.16) வவுச்சர் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள முதலமைச்சர் நாராயணசாமி வீட்டின் அருகே திரண்ட ஊழியர்கள், அங்கு திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அங்கிருந்து அகற்றினர்.

இதையும் படிங்க:மக்களுக்காக யூ-ட்யூப் சேனல் தொடங்கிய புதுச்சேரி அரசு!