2017ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், பெஹ்லு கான் என்பவர் பசு கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு பசுக்காவலர்களால் கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீது பசு கடத்தியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி தடை சட்டம் 5, 8, 9 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீதும், அவரின் மகன்கள் இஸ்ரத், அரிஃப் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயல் அவர் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாஜக அரசு இதேபோல் செய்தது, காங்கிரஸ் அரசு அமைந்தால் இவை திரும்பபெறப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
ஹரியானா மாநிலம் மேவாத் நகரைச் சேர்ந்த பெஹ்லு கான், ரமலான் பண்டிகையை முன்னிட்டு மாடுகளை வாங்கச் சென்றுள்ளார். அப்போது அவரை பசுக்காவலர்கள் பசு கடத்தியாக சொல்லி கட்டையால் அடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.