செவ்வாய் கிரகத்தில் உள்ள ஆய்வுகளை மேற்கொள்ள இஸ்ரோவால் 2013 நவம்பர் 5ஆம் தேதி ஆளில்லாத விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 2014 செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இந்த விண்கலத்துடன் மார்ஸ் கலர் கேமராவும் பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், போபோஸ் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவின் புகைப்படத்தை இந்த கேமரா தற்போது படம் எடுத்து அனுப்பியுள்ளது.
இந்தப் படத்தை ஜூலை ஒன்றாம் தேதி விண்கலம் எடுத்துள்ளது. செவ்வாய் கோளில் இருந்து 7,200 கிலோ மீட்டர் தொலைவிலும், போபோஸ் சந்திரனிடமிருந்து 4,200 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்து இந்தப் புகைப்படத்தை விண்கலம் எடுத்துள்ளது.
இந்தப் புகைப்படத்தின் அளவு 210 மீட்டர் இருப்பதாகவும் இது கம்போஸ் செய்யப்பட்ட புகைப்படம் எனவும் இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் இந்த புகைப்படம் 6 MCC பிரேமில் வண்ண நிறங்களில் எடுக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.