நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸின் கோரப்பிடியிலிருந்து மீண்டுவந்த கேரள அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது.
அதில், கரோனாவால் பாதிக்கப்பட்டு பிற மாநிலங்களில் உள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர்களை மீண்டும் தங்கள் மாநிலத்திற்கு அழைத்துவரக் கோரிக்கைவிடுத்துள்ளது.
இந்த மனு இன்று நீதிபதிகள் பி.வி ஆஷா, வி. ஷிர்கி தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் பதிலளித்த வழக்கறிஞர், சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வெளி மாநிலங்களில் உள்ள கேரள செவிலியர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்தக் கேரள அரசு வழக்கறிஞர், பிற மாநிலங்களில் உள்ள 68 கேரள செவிலியர்கள் தங்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதையும், அவர்களுக்கு உணவு, தங்குமிடத்திற்கான வசதிகள் முறையாக கிடைக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
மேலும், செவிலியர்கள் அழைத்துவர மத்திய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சிறிதளவு தளர்வுகள் அளிக்கவேண்டும் எனவும் கோரினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இது மாநில அரசுகளிடையே கலந்து ஆலோசிக்கப்படவேண்டிய ஒன்று எனவும், இந்த வழக்கை ஏப்ரல் 30ஆம் தேதி மறு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இதையும் பார்க்க:நாடு திரும்பும் கேரள மக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்