இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் உள்ள சந்தைகள் திறக்கப்பட ஏதுவாக கிருமிநாசினிகள் தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அதன்படி சண்டிகரிலுள்ள தானிய சந்தையில் விவசாயிகளின் விளைப்பொருள்களைக் கொள்முதல் செய்ய ஏதுவாக ட்ரோன் மூலம் கிருமிநாசினி பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து சண்டிகர் மாநகர அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்த ட்ரோன் மூலம் 10 நிமிடங்களில் மூன்று முதல் நான்கு ஏக்கர் வரை பரப்பளவுள்ள நிலத்திற்கு கிருமிநசனி தெளிக்க முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 25 நிமிடங்கள்வரை இந்த ட்ரோனால் தொடர்ந்து பறக்க முடியும்" என்றார்.
மேலும், ட்ரோன்களில் 10 லிட்டர் வரை கிருமிநாசினிகளை வைத்துக்கொள்ளலாம் என்றும் இருபுறமும் சேர்த்து ஒரேநேரத்தில் ஏழு மீட்டர்வரை கிருமிநாசினி தெளிக்கலாம் என்றும் அவர் கூறினார். விரைவில் ட்ரோன்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிறந்து 45 நாள்களே ஆன குழந்தை இறந்த பரிதாபம்