இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மதுபானங்களும் புகையிலை பொருள்களும் எந்த மாநிலத்திலும் விற்பனை செய்யக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இருப்பினும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாத இடங்களில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி தர வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களும் உள் துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்தன.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புது வழிகாட்டுதல்களில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாத இடங்களில் மதுபானக் கடைகளைத் திறக்கலாம் என்று அறிவித்தது. தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து ஆறு அடிக்கு ஒருவர் நிற்க வேண்டும், ஒரே நேரத்தில் ஐந்திற்கும் மேற்பட்டவர்களைக் கடைகளில் அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட வழிகாட்டுதல்களையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
இந்நிலையில், தேசிய தலைநகர் பகுதியில் மதுபானக் கடைகளைத் திறக்க, வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாத இடங்களைக் கண்டறிய நான்கு அரசு துறைகளுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய தலைநகர் பகுதியில் மதுபானங்களை விற்க டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகம், டெல்லி மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், டெல்லி மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், டெல்லி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை கழகம் ஆகிய நான்கு அரசு துறைகளுக்கு அனுமதி உள்ளது. இந்த நான்கு துறைகளின் கீழ் சுமார் 450 மதுபான கடைகள் தலைநகரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் கோவிட்-19 தொற்று காரணமாகப் 4,122 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் பரவும் இஸ்லாமிய வெறுப்புவாத நோய்!