கரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்களால் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால் பிரதமர் மோடியோ, கோரிக்கைகளுக்குச் செவிகொடுக்காமல் மாநில அரசின் குறைகளைப் பற்றி பேசியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், ''கரோனா வைரசைக் கண்டறியும் சோதனைகளில் மாநில அரசின் கைகளை மத்திய அரசு கட்டிப்போட்டுள்ளது. கரோனாவைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசு காலதாமதத்தை மறைத்துள்ளது.
இதுபோன்ற நேரங்களில் மக்களுடன் நெருக்கமாக இருக்கும் மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டிய மத்திய அரசு, தனது ஆளுமையை மாநிலங்களில் காட்டிவருகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல மாநில அரசுகள் வேகமாகவும், மனித நேயத்துடன் சிறப்பாகவும் மேற்கொண்டுவருகின்றன. இதனை மத்திய அரசு பின்தொடர வேண்டும்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி சிறிதும் கவலையின்றி மத்திய அரசு செயல்பட்டுள்ளது. இப்போது அவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். ஊரடங்கு உத்தரவுக்கு முன்னதாக எவ்வித முன்னெச்சரிக்கை திட்டமும் மத்திய அரசிடம் இல்லை.
உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்து டெல்லியில் வேலை செய்துவரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று ஒரே இடத்தில் சொந்த ஊர் செல்வதற்காகக் கூடியுள்ளனர். இது கரோனா பரவுவதற்கு சிறந்த வழிவகையை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை மக்களைப் பற்றியும், அடிதட்டு மக்கள் பற்றியும் சிறிதும் சிந்திக்காமல் மத்திய அரசு ஆட்சி செய்துவருகிறது. கரோனா வைரஸ் தொற்றின்போது பிரதமர் மோடி, மனிதாபிமான பேரழிவை நிகழ்த்தியுள்ளார்" எனக் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: கரோனா அச்சத்தை காசாக்கும் மருத்துவ நிறுவனங்கள்!