கரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்திருக்கும் சூழலில், ஆக்ரா நகரில் கடந்த இரண்டு நாள்களில் 28 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று ட்வீட் செய்திருந்தார்.
இந்த தகவல் ஆதாரமற்றதென்றும், இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகள் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுமாறும் ஆக்ரா மாவட்ட ஆட்சியர் பிரபு நாராயன் சிங் பிரியங்காவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "ஆக்ராவில் கடந்த 109 நாள்களில் இதுவரை ஆயிரத்து 139 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
48 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழந்ததாக நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் பொய். ஆதாரமற்றது. இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகள் பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் இரவு பகல் பார்க்காமல் கரோனா கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்தச் சூழலில் இதுபோன்ற தகவல் அவர்களை விரக்தியடையச் செய்யும். பொதுமக்கள் மத்தியிலும் இது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கலாம். ஆகையால் 24 மணி நேரத்துக்குள் நீங்கள் கூறிய அந்தத் தவறான தகவலைத் திருத்தி வெளியிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.