கரோனாவுக்கு எதிரான போரில் பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்தும்படி மக்களிடையே மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதற்கிடையே, சவுரவ் தாஸ் என்று சமூக ஆர்வலர், இந்தச் செயலியை தயாரித்தது யார் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டுள்ளார்.
ஆனால், இதற்குச் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும் துறைகளும் மழுப்பலான பதில்களையே அளித்தன. மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்ட ஒரு செயலி குறித்த விவரங்கள் அமைச்சகங்களிடமே இல்லையா எனப் பலர் கேள்வி எழுப்பினர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, மத்திய தகவல் ஆணையம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள விளக்கத்தில், "ஆரோக்கிய சேது செயலி வெளிப்படையான தன்மையில் தயாரிக்கப்பட்டது.
கரோனாவுக்கு எதிரான போரில், அரசு, தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் இந்தச் செயலி தயாரிக்கப்பட்டது. இந்தச் செயலியை தயாரித்தது யார் என்பது குறித்த விவரங்கள் ஏற்கனவே பொதுவெளியில் உள்ளது.
கரோனா ஊரடங்கின்போது, அவசியத்தைக் கருதி 21 நாள்களில் செயலி தயாரிக்கப்பட்டது. தலைசிறந்த தொழில் துறை, கல்வித் துறை ஆராய்ச்சியாளர்களால் முற்றிலும் உள்நாட்டிலேயே இந்தச் செயலி தயாரிக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய தகவல் மையம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து ஆரோக்கிய சேது செயலியை தயாரித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.