போபால் : ஜோமாட்டோவில் கேஷ் ஆன் டெலிவிரி முறையில் அடுத்தடுத்து தனது முன்னாள் காதலனுக்கு உணவு ஆர்டர்களை அனுப்பி காதலி பழிவாங்கிய நிலையில், ஜோமாட்டோ நிறுவனமே அந்த பெண்ணிடம் இனி ஆர்டர் செய்வதை நிறுத்துமாறு கோரிய சம்பவம் போபாலில் அரங்கேறி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அங்கீதா. தனது முன்னாள் காதலனை பழிவாங்கும் நோக்கில் ஜோமாட்டோ மூலம் கேஷ் ஆன் டெலிவிரி முறையில் உணவு ஆர்டர் செய்து அனுப்பி உள்ளார். ஒருமுறை, இருமுறை இன்றி அடுத்தடுத்து மூன்று முறை தன் காதலருக்கு கேஷ் ஆன் டெலிவிரி முறையில் அங்கீதார் உணவு ஆர்டர் செய்து உள்ளார்.
இதையடுத்து, ஜோமாட்டோ நிறுவனம், முன்னாள் காதலருக்காக உணவு ஆர்டர் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு அங்கீதாவிடம் கோரி விடுத்தது. இது தொடர்பாக ஜோமாட்டோ நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில், போபாலை சேர்ந்த அங்கீதா தயவு செய்து உங்கள் முன்னாள் காதலருக்கு உணவு ஆர்டர் செய்வதை நிறுத்திக் கொள்ளவும்.
நீங்கள் அனுப்பிய மூன்றாவது உணவு ஆர்டரையும் உங்கள் முன்னாள் காதலர் பணம் செலுத்தி வாங்க மறுத்துவிட்டார் என்றும் தயவு செய்து மேற்கொண்டு ஆர்டர் செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறும் ஜோமாட்டோ நிறுவனம் ட்விட்டில் தெரிவித்து உள்ளது.
சிறிது நேரம் கழித்தும் மீண்டும் ட்வீட் போட்ட ஜோமாட்டோ நிறுவனம், "யாரவது ஒருவர் அங்கீதாவிடம் சொல்லுங்களேன், அவரது கணக்கு முடக்கப்பட்டு விட்டது என்று. இருப்பினும் முடக்கப்பட்ட கணக்கில் இருந்து அவர் 15 முறை முயற்சித்து உள்ளார். அவரை தயவு செய்து நிறுத்துமாறு சொல்லுங்களேன்" என்று ஜோமாட்டோ நிறுவனம் கூறி உள்ளது.
ஜோமாட்டோ நிறுவனத்தின் ட்வீட் வேகமாக பரவத் தொடங்கியது. ஆயிரம் முறைக்கு மேல் ஜோமாட்டோவின் பதிவு ரீட்வீட் செய்யப்பட்ட நிலையில், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவியத் தொடங்கின. நூதன முறையில் முன்னாள் காதலை பெண் பழிவாங்கியது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கிய நிலையில், நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதேபோன்ற சம்பவம் தன் அலுவலகத்தில் நடந்ததாகவும், ஆனால் அங்கு ஜோமாட்டோவுக்கு பதிலாக ஸ்வீக்கியில் இருந்து ஆர்டர்கள் வந்து குவிந்ததாகவும் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க : வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் கேட்ஜெட்ஸ் இறக்குமதிக்கு தடை - மத்திய அரசு!