லக்னோ(உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலம், காஸிப்பூர் நகருக்கு அருகில் உள்ள 'தத்திரி கட்' பகுதியில் கங்கை நதி பாய்கிறது. இதில் பிறந்து 21 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று பெட்டியில் அடைக்கப்பட்டு கங்கை நதியில் விடப்பட்டுள்ளது.
அப்போது அந்த நதிக்கரையில் இருந்த படகுக்காரர் குல்லு, நீரில் மிதந்து வரும் மரப்பெட்டியில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்பதை அறிந்தார்.
பெட்டியில் காத்திருந்த அதிர்ச்சி:
இதையடுத்து அவர் அப்பெட்டியைத் திறந்து பார்க்கையில், அதனுள் இந்துக்கடவுள்களான துர்கா மற்றும் விஷ்ணு ஆகிய கடவுளர்களின் உருவப்படங்களுடன், துணியில் மூடப்பட்ட பெண் குழந்தையும் இருந்தது. மேலும் அக்குழந்தையின் அருகே இருந்த ஜாதகக் குறிப்பில், அக்குழந்தையின் பெயர் 'கங்கா' எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து குல்லு, அக்குழந்தையைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று குளிக்கவைத்து, பால் புகட்டினார். யார் இவ்வாறு பெட்டியினுள் குழந்தையை வைத்து நீரில் விட்டார்கள் என்று அவருக்கு இதுவரை தெரியவில்லை.
குழந்தைக்கு உரிமை கொண்டாடிய தம்பதி:
பின்னர், கடந்த 14ஆம் தேதி மாலை, குல்லுவின் இருப்பிடத்திற்கு வந்த, ஒரு தம்பதியினர் குழந்தை துர்கா தங்களுக்குச் சொந்தமானவள் என வாதாடினர். ஆனால், குல்லுவின் குடும்பத்தினர் குழந்தை துர்கா, கடவுளின் அருளால் கிட்டியவள் என்று கூறி தரமறுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று(ஜுன் 15), குல்லு இவ்விவகாரத்தில் காவல் நிலையம் சென்று வழக்குப்பதிந்து, இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் மனுவை சமர்ப்பித்தார்.
இதையடுத்து இதுதொடர்பான மனு மீதான விசாரணை ஒரு வாரத்தில் நிகழும் என்றும், அதில் இப்பிரச்னை தீர்க்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். காவல் துறையினரும் குழந்தை துர்காவை கங்கை நதியில் விட்டவர் யார் என விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்ணனைப்போல்...
பண்டைய காலத்தில் இயற்றப்பட்ட மகாபாரத இதிகாசத்தில் கர்ணன் என்னும் கதாபாத்திரம், பிறந்தவுடன் கங்கை நதியில் பெட்டியில் விடப்படுவது போன்று, இச்சம்பவமும் நிகழ்ந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.