ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் நேற்று நடைபெற்ற 'ஸ்பந்தனா' காணொலி மாநாட்டின்போது மாநிலத்தின் கோவிட் நிலைமை குறித்தும், பிற பிரச்சினைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசித்தார்.
அதில் ஜெகன் மோகன், “கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை வேகமாகப் பரவுவதைக் கருத்தில்கொண்டு வரும் மாதங்களில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
2020 முழு ஊரடங்கின்போது அரசுக்கு கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது, மக்களுக்கு சுமார் ரூ.80,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 320-340 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படுவது போதுமானது.
104 அழைப்புதவி மையங்களுக்கான பொறுப்பை மாவட்ட ஆட்சியர்கள் எடுத்து அவை திறம்படச் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும். 104 அழைப்புதவி மையத்தை அழைத்த மூன்று மணி நேரத்திற்குள் கோவிட் நோயாளிகளுக்கு படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்" என்று கூறினார்.
மேலும் ஊரடங்கு காரணமாக அரசுக்கு ஏற்படும் இழப்பு என்பது ஒவ்வொரு ரூபாய்க்கும், சாதாரண மனிதர்கள் தங்களது நான்கு ரூபாயை இழப்பார்கள் என்று அரசு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.