வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெரிய புதூரைச் சேர்ந்தவர்கள் அனிதா - ராபர்ட் தம்பதி. அனிதா தற்பொழுது ஒன்பது மாதம் கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், இன்று தனது உடல் பரிசோதனைக்காக கணவர் ராபர்ட் உடன் இருசக்கர வாகனத்தில் பெரிய புதூரில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில், காட்பாடி மேம்பாலம் அருகே வந்தபோது, திருப்பதியில் இருந்து திருவண்ணாமலை வரை செல்லும் அரசுப் பேருந்து மோதியதில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் 9 மாத கர்ப்பிணி அனிதா படுகாயம் அடைந்துள்ளார். அதேநேரம், அவரது கணவர் ராபர்ட் காயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு, வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து காட்பாடி போலீசார் விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அனிதா வயிற்றில் இருந்த 9 மாத குழந்தை இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சாலையின் இரு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் சூழ்ந்துள்ளதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன எனவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே விபத்துகளைத் தவிர்க்க முடியும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவியை நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய கணவன் கைது.. கோயம்பேட்டில் பரபரப்பு! - HUSBAND ATTACKS WIFE In Road