- " class="align-text-top noRightClick twitterSection" data="">
கோயம்புத்தூர்: கோவையில் நேற்று (மார்ச் 18) பிரதமர் கலந்துகொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒரு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி சீருடையுடன் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவிகள் பங்கேற்றது குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பினார். அதில், "தேர்தல் பிரச்சாரம் போன்ற செயல்பாடுகளுக்கு குழந்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற தேர்தல் விதிமுறைகளை மீறி, மாணவர்கள் மற்றும் மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளதாக ஊடகங்களின் வழியாக தெரிய வந்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்
மேலும், "அந்நிகழ்விற்கு மாணவர்களை அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது, கடிதம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பள்ளி நிர்வாகத்திற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவின் அடிப்படையில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் புனிதா மற்றும் அந்தோணியம்மாள், தொழிலாளர் துறையின் இணை ஆணையர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை புகழ்வடிவு, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் முடிவில், தலைமை ஆசிரியை புகழ்வடிவு, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் விளக்கத்தை எழுத்துப்பூர்வாக எழுதி வாங்கிக்கொண்டு சென்றனர். இதுமட்டுமல்லாது, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் துறையின் இணை ஆணையர் ஆகியோரிடம் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தனது 'X' வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சூழலில், கடந்த முறை மோடி தமிழகம் வந்தபோது பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொண்டர்கள் பூக்களைத் தூவும்போது செல்போன் ஒன்று பிரதமரின் வாகனம் மீது வீசப்பட்ட நிலையில், நேற்று (மார்ச் 18) பூக்களைத் தூவும் தொண்டர்கள் கைகளில் செல்போன் வைத்திருக்கக் கூடாது என பாஜகவினர் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 18) கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடி ரோடு ஷோ நிகழ்ச்சியின் போதும், மீண்டும் செல்போன் வீசிய சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டதை அடுத்து, தற்போது அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும், ரோடு ஷோ நிகழ்ச்சி துவங்கிய சிறிது தூரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி பங்கேற்ற வாகனப் பேரணியின் போது பிரதமரை பூக்கள் தூவி வரவேற்கும் வகையில், பாஜகவினருக்கு கைகளில் பூக்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, பிரதமர் வந்தபோது பாஜகவினர் பூக்களை பிரதமர் மீது வீசி வரவேற்பு அளித்தனர். அப்போது பாஜகவினர் கையில் இருந்த செல்போன்கள் பிரதமர் வருகை தந்த பாதையில் விழுந்துள்ளது.
அதனைப் பார்த்த பிரதமர் மோடி, செல்போனை எடுத்துக் கொடுக்க அறிவுறுத்தினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்புப் படை பாதுகாவலர்கள், செல்போனை எடுத்து தொண்டர்களிடம் கொடுத்தனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மேலும், கோவையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டது, பிரதமர் வருகை தந்த பாதையில் செல்போன்கள் வீசப்பட்டது போன்ற விவகாரங்கள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல்: கேரளாவில் பிரதமர் மோடி பிரம்மாண்ட வாகன பேரணி!