சென்னை: சென்னை விமான நிலையத்தில் 'உதான் யாத்ரி கஃபே' திட்டத்தின்கீழ் மலிவு விலை உணவகத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று (பிப்.27) தொடங்கி வைத்தார்.
இந்த மலிவு விலை உணவகம் ஏற்கனவே இந்தியாவில் கடந்த டிசம்பரில் கொல்கத்தா விமான நிலையத்தில் முதலில் தொடங்கப்பட்டது. இப்போது இரண்டாவதாக சென்னை விமான நிலையத்தில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் காபி, டீ ரூ.10-க்கும், தண்ணீர் பாட்டில் ரூ.10-க்கும், சமோசா ரூ.20-க்கும், ஸ்வீட் ரூ.20-க்கும் என்று விற்பனை செய்யப்படுகிறது.
உணவகத்தை தொடங்கி வைத்த பின்னர் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உதான் விமான சேவைகள்

மத்திய அமைச்சரான பிறகு முதன் முறை சென்னை வருகிறேன். ஆந்திராவை சேர்ந்ததால் தமிழ்நாட்டை நான் சொந்த ஊராக உணர்கிறேன். நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய நடுத்தர மக்கள் விமான சேவையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் 'உதான் விமான சேவை' தொடங்கப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் 619 வழித்தடங்களில் உதான் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.
இதில் 1.57 கோடி மக்கள் பயணிக்கின்றனர். இந்த மக்களுக்கு குறைந்த விலையில் உணவுகள் அளிக்க வேண்டியது நமது கடமை. அதனால் தான் இந்த உதான் யாத்ரி கஃபே தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேலும் பல விமான நிலையங்களில் இதைத் தொடங்க இருக்கிறோம்.
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் நான்காவது பெரிய விமான நிலையமாக சென்னை விளங்குகிறது. சென்னை விமான நிலைய விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அப்பணிகள் ஃபேஸ் 1, பேஸ் 2 என்று இரு பணிகளாக நடந்து வருகின்றன. அதில் பேஸ் 1 நிறைவடைந்து செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. பேஸ் 2 பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
இதையும் படிங்க: இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கி இருக்கிறது தெரியுமா...? பிற மாநில மக்களை எச்சரிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை விமான நிலையத்தை ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். அது 3.5 கோடியாக அதிகரிக்க உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. தமிழ்நாட்டில் கோவை விமான நிலையமும் அதிக அளவு பயன்படுத்தும் விமான நிலையமாக உள்ளது. அதை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.
பரந்தூர் விமான நிலைய பணிகள்
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளான இடங்கள் தேர்வு செய்வது முடிவடைந்துள்ளன. இரண்டாம் கட்ட பணிகளாக டெல்லியில் தனி ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் டெல்லியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். பரந்தூர் விமான நிலையத்திற்கு இடத்தை தேர்வு செய்து முடிவு செய்தது மாநில அரசு தான். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால், அது குறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.
சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்.
உதான் திட்டத்தின் கீழ் சேவைகள்
தமிழ்நாட்டில் உதான் திட்டத்தில் நெய்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் இருந்து விமான சேவைகள் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளன. இதில் சேலம், சென்னை இடையே ஏற்கனவே விமான சேவைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்ததாக வேலூர், சென்னை இடையே விமான சேவைகள் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் நடக்கின்றன. விரைவில் வேலூர், சென்னை இடையே உதான் திட்டத்தில் விமான சேவைகள் செயல்பாட்டிற்கு வரும். அதே போல, நெய்வேலியில் இருந்தும் விமான சேவைகள் தொடங்க இருக்கின்றன.
தொகுதி மறுசீரமைப்பில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும். தொகுதி மறுவரையறை சுமூகமான முறையில் செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். எனது கருத்துக்கள் எனது கட்சி சார்ந்ததாக இருக்கும்'' என்றார்.