சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாளையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில், திமுகவின் 520 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், 500 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 72 மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று, அமைச்சர்கள் உதயநிதி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
முன்னதாக விழா மேடையில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி, சிறப்பான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த நான்கு நாட்களில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். மத்திய சென்னையில் பிரச்சாரம் ஏற்கனவே முடிந்துவிட்டது. வேட்பாளர் யார் என்று உங்களுக்கே தெரியும். கடந்த முறை பெற்ற வாக்குகளை விட, அதிக வாக்கு வித்தியாசத்தில் தயாநிதி மாறனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். பெண்களுக்கு மட்டும் இல்லை, கல்லூரிக்குச் செல்லும் ஆண்களுக்கும் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 17 லட்சம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறுகிறார்கள்.
40க்கு 40 வெற்றியை பெற்றுக் கொடுப்பதுதான் முதலமைச்சருக்கு சிறந்த பிறந்தநாள் பரிசு. முதலமைச்சர் நினைப்பவர்தான் இந்திய பிரதமராக வர வேண்டும். நாம் ஒரு ரூபாய் கொடுத்தால், 28 பைசாதான் திருப்பிக் கொடுக்கிறது மத்திய அரசு. 28 பைசா மோடி என பிரதமருக்கு நான் பேர் வைத்துள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு, மத்திய அரசுக்கு 6 லட்சம் கோடி வரி வருவாய் கொடுத்துள்ள நிலையில், வெறும் 1.5 லட்சம் கோடி மட்டுமே திருப்பி கொடுத்துள்ளதாக, பிரதமர் மோடி திமுகவை அழிப்பதாக சொல்கிறார். அவரால் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
மேலும், இரண்டு மூன்று நாட்கள் தமிழ்நாடு வந்து பிரச்சாரம் செய்தால், வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார். பிரதமர் மோடி 40 நாட்கள் இங்கே தங்கி பிரச்சாரம் செய்தாலும், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது. பாபர் மசூதியை இடித்து விட்டு ராமர் கோவில் கட்டியுள்ளீர்கள். கோயில் கட்டுங்கள், அங்கு தமிழ்நாடு மக்கள் வந்து கோயிலில் சாமி கும்புடுவார்களே தவிர, ஒட்டு உதய சூரியனுக்குதான் போடுவார்கள். ஏனென்றால், தமிழ்நாட்டு மக்கள் மிக தெளிவானவர்கள்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் கஃபே யாருடையது? அப்துல் கலாமுக்கு உள்ள தொடர்பு!