கோயம்புத்தூர்: கோவையில் கல்லூரி மாணவர்கள் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வீடு ஒன்றில் கஞ்சா செடிகள் வளர்த்தது கண்டுபிடிக்கப்பட்டு 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கோவையில் மாணவர்கள் தங்கியுள்ள பல்வேறு விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் கல்வி நிறுவனங்களும் பிரபலமாக உள்ளன. இதன் காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் கோவையில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், சில விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதாக அவ்வப்போது போலீசாருக்கு ரகசிய தகவல் வருகிறது. காவல்துறையினரும் அவ்வப்போது மாணவர்கள் தங்கியுள்ள அறைகளை திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் மாணவர் அறைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு; தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
அந்த வகையில், சரவணம்பட்டி பகுதியில் உள்ள 15 மாணவர் விடுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. விடுதிகளின் அனைத்து அறைகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது, போதைப் பொருள் எதுவும் பிடிபடவில்லை. இந்த சோதனை குறித்து போலீசார் கூறுகையில், மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வருங்காலங்களில் இது போன்ற சோதனைகள் தொடரும் என்றனர். மேலும், மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தக்கூடாது, கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுரை வழங்கினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், 4 மாணவர்கள் கைது செய்தனர். சரவணம்பட்டி பகுதியில் உள்ள 15 மாணவர் விடுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு மாணவர்களின் உடைமைகளை ஆராய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.