திருநெல்வேலி: திமுக அரசின் சாதனைகள் மற்றும் நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வகையில், தமிழகம் முழுவதும் திமுகவினர் வீடு வீடாகச் சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில், தச்சநல்லூர் 2- வது வார்டு பகுதியில், மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் மாலைராஜா ஏற்பாட்டில், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில், திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, திண்ணை பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக அரசின் சாதனைகள் மற்றும் நிதிநிலை அறிக்கையின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை எடுத்துக் கூறினால் நாட்கள் போதாது, அவ்வளவு திட்டங்கள் உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. என்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கேட்கிறார்கள்? மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பெண்களுக்கு ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் மிச்சமாகிறது. மத்திய அரசு என்று ஒரு அரசு செயல்பட்டு வருகிறது, அவர்கள் திடீர் திடீரென விலையை ஏற்றுகிறார்கள். இன்றைய சமையல் எரிவாயு 1,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை இன்று 1 கோடியே 13 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் 13 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தால் பெண்களின் சமூக பொருளாதார நிலை உயர்கிறது.
பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளுக்கு எந்த நாட்டிலும் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால், நமது முதல்வர் கொடுத்துள்ளார், அதுதான் மகளிர் உரிமைத்தொகை, ஆட்டிசம் உள்ள குழந்தைகள், திருநங்கைகள், ஆதரவற்றவர்கள் என இவர்கள் பயன்பெறும் வகையில், தாயுமானவராக இருந்து முதல்வர் மக்களைத் தேடிச் சென்று திட்டங்களை வழங்கி வருகிறார்.
ஆனால் பிரதமர், நிதியமைச்சர் ஆகியோர் இந்த பகுதிக்கு வந்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு, இந்த நிமிடம் வரை சல்லி பைசா கூட வழங்கவில்லை. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய், வீடு இழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார்" என்று பேசினார்.
இதையும் படிங்க: 2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்கு வரப்போவதில்லை - வருவாய்த்துறை அலுவலர்கள் திட்டவட்டம்