சென்னை: நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் அரசியல் கட்சியைத் தொடங்கி, முக்கிய சில பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பி வருகிறார். கட்சி தொடங்கும் போதே வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிக்கை மூலம் அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கை, மாவட்டம்தோறும் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
குறிப்பாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் காரணமாக, நாளை முதல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி, தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான பணியில் ஈடுபடுமாறும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிற கட்சிகளின் பணிகளுக்கோ அல்லது கூட்டங்களுக்குச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார், நடிகர் விஜய். இதனையடுத்து கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தவெக கட்சியில் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதனைத்தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலியை அறிமுகப்படுத்தி, முதல் உறுப்பினராகக் கட்சியில் சேர்ந்தார், விஜய். முன்னதாக இதற்கான உறுப்பினர் சேர்க்கை அணி ஒன்றை உருவாக்கிய விஜய். இதன் மாநிலச் செயலாளராக விஜயலட்சுமி என்பவரையும், மாநில இணைச் செயலாளராக யாஸ்மின் என்பவரையும் நியமித்தார். அதேபோல், மாநிலப் பொருளாளராக சம்பத்குமார் என்பவரை நியமித்துள்ளார்.
கடந்த 8ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு செயலி மூலம் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னர், தனது கட்சியில் அடுத்தக்கட்ட நகர்வுக்கான வேலையில் தீவிரமாக இறங்கிய விஜய்யின் தவெக, தற்போது நாடாளுமன்றத் தேர்தலினால் கட்சியின் ஆலோசனை கூட்டங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "மாநிலக் கல்விக் கொள்கை அடிப்படையில் தமிழ்நாட்டின் கல்விமுறை இருக்கும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்!